

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2011-ல் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானவர் எஸ். காமராஜ். 2016-ம் ஆண்டு இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரானார். பின்னர், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி பணியாற்றி வந்தார்.
அதிமுக வேட்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் என்.முத்துக்குமார் அறிவிக்கப்பட்டதால் வேதனையடைந்த எஸ்.காமராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்.
இதேபோல, 2006 தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானவர் வழக்கறிஞர் பெ.காமராஜ். 2011-ல் அதே தொகுதியில் தோல்வியடைந்தார். 2016-ல் புதிய தமிழகம் கட்சிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் குளித்தலையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் வழக்கறிஞர் பெ.காமராஜ் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.