Last Updated : 26 Mar, 2021 05:32 AM

 

Published : 26 Mar 2021 05:32 AM
Last Updated : 26 Mar 2021 05:32 AM

234 தொகுதிகளில் 23 கோடி துண்டுப் பிரசுரங்கள்: வீடுகள், கடைகள், வாகனங்கள்தோறும் விநியோகம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் கோடிக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 10 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முன்பெல்லாம் பிரசாரப் பொதுக்கூட்டம் மட்டுமல்லாமல் முக்கிய சாலைகள், தெருக்களிலும் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களின் பேனர்கள், கட்அவுட்டுகள் களைகட்டும். இந்தத் தேர்த
லில் அவற்றை பெரும்பாலும் காண முடிய வில்லை. ஒலிபெருக்கி பிரச்சாரம், வாகனப் பேரணி ஆகியவற்றை காண முடிகிறது.
வழக்கம்போல துண்டுப்பிரசுரங்களும் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டு, வீடுகள்,
கடைகள், வாகனங்கள்தோறும் விநியோகிக் கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னையில் உள்ள ஜெம் கிராபிக்ஸ் உரிமையாளர் சாதிக் பாட்ஷா கூறுகையில், “ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் லட்சக்கணக்கில் துண்டுப்பிரசுரங்கள் அச்சிடுவார்கள். நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அச்சிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் ஆயிரம், இரண்டாயிரம் அச்சிடுவார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன. சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால் அங்கு பெரிய கட்சிகள் முதலில்
கட்சி சார்பில் 2 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்படும். பின்னர் வேட்பாளர் சார்பில் 2 லட்சம் பிரசுரங்கள் அச்சிட்டு வாங்குவார்கள். தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தங்களது சின்னம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற 50 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் வரை அச்சிடுவார்கள். அதன்படி கணக்கிட்டால் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10 லட்சம் துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன" என்றார்.

வண்ணமயமான ஒவ்வொரு துண்டுப்பிரசுரத்திலும் கட்சித் தலைவர் படம், வேட்பாளர் படம், கட்சியின் சின்னம், கட்சியின்
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான வாக்குறுதிகள், குறிப்பிட்ட தொகுதியில் என்னென்ன செய்வேன் என வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டில் சிவகாசி, சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் உள்ள நூற்றுக்கணக்கான மினி, மெகா ஆப்செட்டுகளில் பல வண்ணங்களில், டிசைன்களில் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன. "முன்பு ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவதற்கு 65 காசுகள் செலவானது. ஜிஎஸ்டி வரி, காகிதம், இங்க் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரித்து தற்போது ஒரு துண்டுப்பிரசுரம் அச்சிடுவதற்கு 90 காசுகள் செலவாகின்றன. ஒரு லட்சம் துண்டுப்பிரசுரம் ரூ.90 ஆயிரத்துக்கு அச்சிட்டு தரப்படுகிறது" என்கின்றனர்
அச்சக உரிமையாளர்கள். தொகுதிக்கு சுமார் 10 லட்சம் வீதம் 234 தொகுதிகளில் 23 கோடிக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x