Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 411 பெண்கள் உட்பட 3,998 வேட்பாளர்கள்; பணப்பட்டுவாடா புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உறுதி

சென்னை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 411 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் உட்பட 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்த சில குழப்பங்கள் நீக்கப்பட்டு, இறுதி நிலவரப்படி 3,585 ஆண், 411 பெண், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என 3,998வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வரும் மார்ச் 30-க்குள் விரைவு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

தபால் வாக்கு படிவங்கள்

தபால் வாக்கு பொறுத்தவரை, 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைமுறைகள்படி, மார்ச் 16-ம் தேதி வரைவிருப்ப கடிதம் பெறப்பட்டது. தற்போது தபால் வாக்கு படிவங்கள்விநியோகிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக, அந்த வாக்காளர்கள் குறித்த பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பட்டியல் வழங்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர்கள் குறித்த தகவல் அளிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஏப்.5-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குமுன்னதாகவே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை, வாக்குப்பதிவு அதிகாரி,நுண்பார்வையாளர் வழங்குவார்கள். படிவம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறுவது வீடியோவில் பதிவு செய்யப்படும்.

பதற்றமான வாக்குச் சாவடிகள்

பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இணைந்து, பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து முடிவெடுப்பார்கள். தொடர்ந்து, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுடன் பேசி அதன்பின் தேவைப்பட்டால் எண்ணிக்கையை அதிகரிப்பார்கள். தமிழகத்தில் தற்போது 88,937 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 10,528, மிகவும்பதற்றமானவை 300 வாக்குச்சாவடிகள் என்ற அளவில் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் 44,758 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்படுகிறது. தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியிருப்பதால், தற்போது கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரைஎன ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இதர வாக்காளர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது அதிகமானவர்கள் இருக்கும் பட்சத்தில், டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருமானவரித் துறை சோதனையில், தேர்தல் தொடர்பான பறிமுதல் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு விவரங்களை அளிப்பார்கள்.

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வந்தால், கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். மேலும், இந்த தேர்தலில், வாக்குச்சாவடிகளில் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு பொறுத்தவரை வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பு வரை வெளியிடலாம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பை அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னரே வெளியிடப்பட வேண்டும்.

செலவின கவனம் பெற்ற 105தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, 118 செலவின பார்வையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இன்று மாலை (மார்ச் 25) 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x