

மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவைத் தாண்டி வேகமாக நிரம்பி 23 கனஅடியை நெருங்கி வருவதால், உபரிநீர் வெளியேறி செல்லும் கிளியாற்றின் கரையில் உள்ள 9 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் நகரின் மையப் பகுதியில் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி. ஆவணங்களின்படி இந்த ஏரிக் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராகும். ஆனால் ஆக்கிரமிப்பால் 1,450 மீட்டர் கரை மட்டுமே இப்போது உள்ளது. ஏரியின் கொள்ளளவாக 21.30 கன அடி ஆழத்தில் தண்ணீர் சேமிக்க முடியும். முழுகொள்ளளவை அடைந்ததும் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கலங்கலில் 110 ஷெட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏரித் தண்ணீர் மூலம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முள்கத்திரி குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் என 9 கிராமங்களில் மட்டும் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெற்று வந்தன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் ஏரிகள் வறண்டன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததாலும், ஏரியின் முக்கிய நீர்வரத்தாக உள்ள கிளியாற்றில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து, மதுராந்தகம் ஏரி அதன் முழுகொள்ளளவான 21.30 கனஅடியை நேற்று முன்தினம் எட்டியது. எனினும், கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற 23 அடியை ஏரியில் எட்ட வேண்டும். ஏரிக்குத் தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால், நேற்று மாலை அல்லது இரவுக்குள் 23 அடியை நீர்மட்டம் எட்டுவதற்கான நிலை இருந்தது. இதனால், உபரிநீர் வெளியேற்றப்படும் கிளியாற்றின் இருபுறங்களின் கரைப் பகுதிகளில் வசிக்கும் மேற்கூறிய 9 கிராமங்களுக்கு, முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும்பட்சத்தில் 2,853 விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி கூறியதாவது: மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இரவுக்குள் அதிகபட்ச கொள்ளளவைத் தாண்டி உபரிநீர் எந்நேரமும் வெளியேறும் நிலை உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளியாற்றின் கரையில் உள்ள 9 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை யான பாதுகாப்பு நடவடிக்கைகள் வருவாய்துறை மூலம் மேற் கொள்ளப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக் களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அரசுத் துறை களும் தயார் நிலையில் உள்ளன என்றார்.