Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு வர மோடிதான் காரணம்: கிருஷ்ணகிரியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெருமிதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் வர காரணமாக இருந்தவர் மோடி தான் என கிருஷ்ணகிரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று முன்தினம் இரவு அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, அதிமுக வேட்பாளர்கள் வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி, ஓசூர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி அசோக்குமார், பர்கூர் கிருஷ்ணன், ஊத்தங்கரை (தனி) தமிழ்செல்வம், தளி தொகுதி பாஜகவேட்பாளர் மருத்துவர் நாகேஷ்குமார் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்கள் நலனில் முக்கியத்துவம் கொடுத்து தனிக் கவனம் செலுத்தியவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். 10ஆண்டுகால ஆட்சியில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் கோடி நிதியைஈர்த்து தொழில்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 2006-ல் திமுகதேர்தல் அறிக்கையில் நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் வழங்கவில்லை.

நாம் சொன்னதை செய்வோம். தற்போது தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின், 6 சிலிண்டர்கள் தருவதாக குறிப்பிட்டுள்ளோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவந்தது. காளையை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்க அவர்கள் ஆட்சியில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கி உடைத்தெரிந்த பெருமை நம்மை சாரும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் வர காரணமாக இருந்தவர் மோடி.

காங்கிரஸ் - திமுக கூட்டணிஆட்சியில் தமிழகத்தின் நலனுக்காக என்ன திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்? மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நாம் கொண்டு வந்துள்ளோம். இன்னும் 6 மாதத்தில் அந்த மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x