

கோவை மேற்கில் மருதமலை அடிவாரத்தில் தொடங்கி, கிழக்கில் காந்திமாநகர் வரை பரந்து விரிந்துள்ளது கோவை வடக்கு தொகுதி. மாநகராட்சியின் 19 வார்டுகள் இதில் அடங்கியுள் ளன. வடவள்ளி, வீரகேரளம், கல்வீரம்பாளையம், லிங்கனூர், பூசாரிபாளையம்,பி.என்.புதூர், கோயில்மேடு, வெங்கிட்டா புரம், சாய்பாபா காலனி, சங்கனூர், ரத்தினபுரி, மணியகாரம்பாளையம், ராமகிருஷ் ணாபுரம், கணபதி, காந்திமாநகர் பகுதி கள் தொகுதிக்குள் அடங்கியுள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரி ஆகிய முக்கிய கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. கணபதி, காந்திமாநகர், ரத்தினபுரி, நல்லாம்பாளையம், சங்கனூர் பகுதி களில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தொகுதிக்குள் வர்த்தக பகுதிகளும் நிறைந்துள் ளன.
முக்கியப் பிரச்சினைகள்
வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது. தண்ணீரைவிலைகொடுத்து வாங்க வேண்டியிருப் பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி, மாறிஆட்சிக்கு வந்தாலும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலத்தை வழங்கிய உரிமையாளர்களுக்கு இன்னும் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.
பாலக்காடு சாலை, சிறுவாணி சாலை, மருதமலை சாலை, மேட்டுப்பாளையம் சாலை என 4 முக்கிய சாலைகளை இணைக்கும் மதுக்கரை சுகுணாபுரம்-நரசிம்மநாயக்கன்பாளையம் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இதன்மூலம் கோவை நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். வடவள்ளியில் அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு அரசு மருத்துவமனை அமைந்தால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தையும், கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எனவே, பெரிய வெங்காயம், கிழங்கு வகைகளை தவிர, மற்ற காய்கறிகளுக்கான மார்க்கெட்டை அங்கிருந்து இடமாற்றம் செய்து அடிப்படை வசதிகளோடு வேறு இடத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய காய்கறி மார்க்கெட்டை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கின்றனர், வியாபாரிகள். சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பன்னடுக்கு தொழிற்பேட்டையை தொகுதிக்குள் அமைத்துத்தர வேண்டும் என்பது தொழில்முனைவோரின் கோரிக்கையாக உள்ளது.
தொகுதியின் பிரதான பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெருக்கடி. கோவை-சத்தியமங்கலம் சாலையில் கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் தொடங்கி, சரவணம்பட்டி வரை குறுகலான சாலையால் எப்போதும் நெரிசல் இருந்து வருகிறது. இதற்குத் தீர்வுகாண, முக்கிய இடங்களில் இறங்குதளங்களுடன் மேம்பாலம் கட்ட வேண்டும். மூன்று முக்கிய சாலைகளை இணைக்கும் லாலி சாலை சந்திப்பிலும் நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அவசியம் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள்?
கோவை வடக்கு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்து குடியேறிய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். புதிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவு வசிக்கின்றனர். குறிப்பிட்ட மக்களின் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை இல்லாததால், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
களம் காணும் வேட்பாளர்கள்
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கோவை வடக்கு தொகுதியில் 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது. 2016-ல் அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் 77,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட மீனாலோகு 69,816 வாக்குகள் பெற்றார்.
இந்தமுறை அதிமுக சார்பில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் போட்டியிடுகிறார். தெற்கில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டிருந்தநிலையில், பாஜகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால், அவருக்கு கோவை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அப்போதைய வடவள்ளி பேரூராட்சியின் தலைவர் வ.ம.சண்முகசுந்தரம் களம் காண்கிறார். இவர் அந்த பேரூராட்சியின் தலைவராக 15 ஆண்டுகள் இருந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.தங்கவேலு போட்டியிடுகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் கோவை வடக்கில் மக்கள் நீதி மய்யத்துக்கு 27,549 வாக்குகள் கிடைத்தன. மேலும், பக்கத்துக்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அதன் தாக்கம் இங்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, நாம் தமிழர் கட்சி சார்பில் கோ.பா.பாலேந்திரனும், அமமுக சார்பில் அப்பாதுரையும் போட்டியிடுகின்றனர்.