Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

கோயில்களை பாதுகாக்கும் சத்குரு கருத்துக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோயில்களின் அவல நிலைகளை கண்டு மனமுடைந்த பக்தர்கள், அவற்றை ஆதாரத்துடன் ட்விட்டரில்வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட அந்த வீடியோக்களை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த முன்னெடுப்பை வரவேற்கும் விதமாக ‘‘ #FreeTN Temples #கோயில்அடிமை நிறுத்து’’ ஆகிய ஹாஷ்டேக்குகளை உருவாக்கினார். பல்வேறு துறை பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பெண் தொழில் அதிபரும், பையோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ், திரைப்பட நடிகைகள் கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவிணா டன்டன், மெளனி ராய், திரெளபதி பட இயக்குநர் மோகன், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் #FreeTN Temples என்ற ஹாஷ்டேக் தமிழக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

சத்குரு கருத்து

இதுதொடர்பாக சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில்,‘‘ #கோயில் அடிமை நிறுத்து என்ற இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ, போராட்டம் செய்வதற்காகவோ தொடங்கப்படவில்லை.

மேலும், யாரோ ஒரு தரப்பினரை தாக்கும் நோக்கத்திலும் இதை நாங்கள் தொடங்கவில்லை. தொன்மையான நம் தமிழ்நாட்டு கோயில்களின் அவல நிலையை பார்த்து எங்களுக்குள் உருவான ஆழமான வலியையும் வேதனையையும் வெளிப்படுத்துவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். நம் கோயில்கள் பெரியளவில் சிதைக்கப்பட்டு வருவதாக யுனெஸ்கோ அமைப்பே கூறியுள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக, பொதுமக்களும், ஈஷா தன்னார்வலர்களும் நூற்றுக்கணக்கான வீடியோக்களையும், புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தமிழ் கலாச்சாரத்தின் இதயமாகவும், பக்தியின் மையமாகவும், கலைகள், மொழி போன்றவற்றின் பிறப்பிடமாகவும் விளங்கும் கோயில்கள் இப்படி அழிந்து வருவதை பார்க்கும்போது இதயம் வலி கொள்கிறது. ஆயிரக்கணக்கான கோயில்கள் எவ்வித பராமரிப்பும் இன்றி அழிந்து வருகின்றன.

எனவே, இக்கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டிய தருணமிது. இதற்காக நான் இன்று 100 ‘ட்வீட்’களை பதிவிட உள்ளேன். தயவுசெய்து அனைவரும்உங்கள் மதங்களை கடந்து இதற்கு ஆதரவு கொடுங்கள். இது மிகப்பெரிய அநீதி. இது இந்துக்களை பற்றியது மட்டும் அல்ல. நம் தேசத்தில் நம் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எந்த சமூகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் சொந்த வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு கோயில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x