Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

திருப்போரூர் தொகுதி மக்களுக்கு சிப்காட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி

திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுசேரி தொழிற்பூங்கா, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் பேரூராட்சி அலுவலம் அருகே பிரச்சாரம் செய்தார். வாகனத்தில் இருந்தபடி அவர் பேச, திரையில் அவரது பேச்சு காணொலியாக ஒளிபரப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:

திமுக என்றால் சுயநலம்; சுயநலம் என்றால் திமுக. இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் 2006-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது, துணை நகரம் அமைக்க 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்காக, தயாநிதிமாறன் என்னை நேரில் சந்தித்து திட்டம் குறித்து கூறினார். இத்திட்டம் மூலம் சென்னையைவிட துணை நகரம் சொர்க்க நகரமாக மாறிவிடும் என தெரிவித்தார்.

ஆனால், நான் மறுத்துவிட்டேன். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டத்தால் 44 கிராமங்கள் மற்றும் 25 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்.

திருப்போரூர் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இப்பிரச்னையை தீர்க்க, கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைப்போம். பக்கிங்ஹாம் கால்வாயில் சென்னை முதல் மாமல்லபுரம் வரை சுற்றுலா படகு சவாரி அமைப்போம். சென்னை முதல் புதுச்சேரி வரையில் பாதை அமைக்க திட்டத்தை ஏற்படுத்துவோம். சிறுசேரி தொழிற்பூங்கா, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

மாமல்லபுரத்தில் சிற்ப நகரம் மற்றும் மாமல்லபுரம் புதுச்சேரி இடையே பல்நோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கானத்துர் அருகே மீன் இறங்கும் தளம் அமைக்கப்படும் என்றார்.

மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x