

எங்களது உழைப்பில் திமுக வேட்பாளர்கள் விளம்பரம் தேடு கின்றனர் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். எம்.பி.கே. புதுப்பட்டி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், பொன்னகரம், முதுகுடி, கம்மாபட்டி, நெசவாளர் காலனி, வேட்டை பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாயத் தலைவர்கள், பொது மக்களை சந்தித்து நேற்று வாக்கு சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து மாலையில் ஆவாரம்பட்டி, சாலியர் விநாயகர் கோயில், தர்மராஜா பெரியசாவடி அருகில், சின்ன சுரைக்காய்பட்டி, அண்ணாநகர் பிஎஸ்கே பார்க், அம்பேத்கர் சிலை அருகில், மதுரை ராஜா கடைத்தெரு, புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், திருவனந்தபுரம் தெரு, சிங்கராஜாகோட்டை, ஜவஹர் மைதானம், லட்சுமியாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாட்டாளி, படைப்பாளி, நெசவாளர் களுக்காகச் செயல்படும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. உழைப்பை நம்பி பிழைக்கும் கூட்டம் அதிமுக. எங்களது உழைப்பில் திமுக வேட்பாளர்கள் விளம்பரம் தேடுகின்றனர். பொய்யான வாக்குறுதியை கூறி ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.