

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநில உரிமைகளை மீட்போம் என திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை ஆதரித்து சாயல்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட விடவில்லை. அவர் நீட் தேர்வை எதிர்த்தார். ஆனால் தற்போதுள்ள அதிமுக அரசு கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் மோடியிடம் அடகு வைத்துவிட்டது. சசிகலா ஒன்றும் மக்கள் பிரச்சினைக்காக போராடி சிறைக்கு செல்லவில்லை. இதை அமைச்சர் ஒருவரே சொல்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எதை எதையோ அமைச்சர்கள் பேசி வந்தனர். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே தெரிவித்துவிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீட்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடியில் வேட்பாளர் செ.முருகேசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி பேசினார்.