திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை மத்திய, மாநில அரசுகளின் சதித்திட்டம்: வைகோ குற்றச்சாட்டு

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
Updated on
1 min read

‘‘திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும், கல்விநிலையங்களிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு மத்திய,மாநில அரசுகளின் சதித் திட்டமே காரணம் என்று மதிமுக பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டினார்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். பயணியர் விடுதி முன்புஅவர் பேசியதாவது:

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும், கல்விநிலையங்களிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இது மத்திய, மாநில அரசுகள் செய்யும் சதித் திட்டம். எம்.பி.யாக இருந்தபோது 68 ஆயிரம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி இலவசமாக போட்டுள்ளேன்.

தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 13 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். இவற்றுக்கு மக்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இந்த ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில் தங்களுக்கு வேண்டப்பட்டவருக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் முதல்வர் பழனிசாமி ஊழல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஊழல் புகார் அளித்துள்ளார். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் படித்துவிட்டு சுமார் 90 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் வேலையின்றி உள்ளனர். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய அரசு வேலைக்கு ஆள் எடுக்க, அவர்கள் அரசே ஆணையத்தை அமைக்குமாம். பிஹார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆள் எடுத்து தமிழகத்துக்கு அனுப்பி வைப்பார்களாம். எதிர்காலத்தில் நமது பிள்ளைகளின் வாழ்வை பாழ்படுத்தக்கூடிய கொடுமையை இந்த அரசு மத்திய அரசின் எடுபிடியாகச் செய்து வருகிறது.

நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லை என இதுவரை 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு இந்த அரசுதான் காரணம். காவல்துறையின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தவறு செய்வாராயின் யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது.

எனவே, இவற்றையெல்லாம் சிந்தித்து பார்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து புதூரில் விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in