

திருச்சி மாநகரில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளர்கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கட்சியின் முதன்மைச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேரு, தனது தொகுதிக்குட்பட்ட 49-வது வார்டு ஆழ்வார்தோப்பு, அண்ணா நகர், அண்டகொண்டான், காயிதே மில்லத் நகர், சின்னசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடையே கே.என். நேரு பேசியது: ஆயிரம் ஆண்டுகள் பழமையான உய்யக்கொண்டான் கால்வாயில் தற்போது கழிவுநீர் கலப்பதால் மாசடைந்துள்ளது.
இதனால், அந்தப் பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கால்வாய் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்வார்தோப்பு பகுதியில் இருந்து தென்னூர் வரை மின் விளக்குடன் கூடிய புதிய பாதை அமைக்கப்படும். இப்பகுதியிலுள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். புதிதாக மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, காஜாமலை விஜி, போட்டோ கமால், அப்பாஸ், வழக்கறிஞர் அந்தோனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் தேமுதிக மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அப்போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.மூவேந்திரன், வட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.