

பேரணாம்பட்டு அருகே பள்ளி வாகனம் விபத்துக்கு உள்ளானதில் சிறுமியின் கை அகற்றப்பட்டது. இதனால் 300-க் கும் மேற்பட்டவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: பேரணாம்பட்டு சாத்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம் (35). இவரது மகள் தாரகை (5). இவர், பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்துவந்தார். கடந்த 20-ம் தேதி மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்ப புறப்பட்டார்.
3 விரல்கள் சேதம்
வாகனத்தின் ஜன்னல் ஓரத்தில் தாரகை அமர்ந்திருந்தார். பள்ளி வளாகத்தில் இருந்து வாகனம் கிளம்பியபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை உரசியபடி வாகனம் சென்றது. அப்போது, தாரகையின் வலது கையின் மூன்று விரல்கள் சேதடைந்தன.
இதையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது வலது கையை முழுமையாக அகற்றினால் மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடியும் என கூறிவிட்டனர். வேறு வழியில்லாமல் சிறுமியின் வலது கை அகற்றப்பட்டது. தற்போது சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதைதான் காரணம் என்று கூறி, 300-க் கும் மேற்பட்ட உறவினர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியின் வாசலை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கக் கோரினர்.
இதுதொடர்பான பேச்சுவார்த் தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரச்சினை காரணமாக பள்ளிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டது.
இதுகுறித்து, தனியார் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பிரசாத்திடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘அப்படி எதுவுமே நடக்கவில்லை’ எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.