

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன் நேற்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 2-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திரு விழாவின் முக்கிய விழாவான ஆழித் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தியாகராஜ சுவாமி ஆழித் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, நேற்று காலை 7.30 மணியளவில் ‘ஆரூரா, தியாகேசா’ என்ற பக்தி முழக்கத்துடன் ஆழித் தேர் வடம் பிடிக்கப்பட்டது. அப்போது, நிலையில் இருந்து புறப்பட்டு கீழ வீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் இடத்தில் தேரை திருப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒருமணி நேரம் போராடி தேரை திருப்பினர். அதன் பின்பு தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று, இரவு 7.20 மணிக்கு தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
பின்னர், ராஜநாராயண மண்ட பத்தில் தியாகராஜ சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று இரவு சபாபதி மண்டபத்தில் எழுந்தருளவுள்ளார். அதன் பின்னர் நாளை (மார்ச் 27) பங்குனி உத்திர தீர்த்தவாரி, இரவு மகா அபிஷேகம், 28-ம் தேதி தியாகராஜ சுவாமி பாத தரிசன விழா ஆகியவை நடைபெறும்.
தேரோட்ட விழாவில் வேலாக் குறிச்சி ஆதீனம் ல சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கயிலை ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாரூர் ஆட்சியர் சாந்தா, எஸ்பி கயல்விழி, கோயில் செயல் அலுவலர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.