Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

தென்காசியில் கணக்குபோட்டு காய் நகர்த்தும் கட்சிகள்: அதிமுக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி

தென்காசி

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் தென்காசி நகராட்சி, சுரண்டை,சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் பேரூராட்சிகள், குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து உள்ளிட்ட கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பரிக்கும் குற்றாலம் அருவிகள் தென்காசி தொகுதியின் அடையாளமாகத் திகழ்கின்றன. விவசாயம், பீடி சுற்றுதல் முக்கிய தொழிலாக உள்ளன. மர அறுவை ஆலைகள் அதிகமாக உள்ளன.

தென்காசி தொகுதியில் 1,42,974 ஆண் வாக்காளர்கள், 1,48,532 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என, மொத்தம் 2,91,524 வாக்காளர்கள் உள்ளனர். நாடார், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர்.

நீண்ட கால கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. இதேபோல், நீண்டகால கோரிக்கையான ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டமும் புத்துயிர் பெற்றுள்ளது. குற்றாலத்தில் சுற்றுலாவைமேம்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி, கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, செவிலியர் பயிற்சி கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கைகளில் முக்கியமானவையாக உள்ளன.விளைபொருட்களை சேமித்துவைக்க குளிர்பதன கிடங்குஅமைக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை திட்டப் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும். தென்காசியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வெளி வட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு முறை சமக தலைவர் சரத்குமார் அதிமுக சின்னத்தில் பெற்ற வெற்றி. திமுக2 முறையும், தமாகா, சுயேச்சை தலாஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் 86,399 வாக்குகளும், அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி 85,877 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தேர்தலிலும் அதே வேட்பாளர்கள் மீண்டும் மோதுகின்றனர்.

பலம்-பலவீனம்

தென்காசி தனி மாவட்டம் உருவாக்கியது, ராமநதி- ஜம்புநதிஇணைப்புக் கால்வாய் திட்டப்பணி தொடங்கியது போன்றவை அதிமுகவுக்கு பலம் சேர்க்கின்றன. மேலும்,தென்காசி தொகுதியில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கூட்டணியில் பாஜக இருப்பதும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் சமுதாய ஓட்டுகள் பாதிப்பது பலவீனமாக கருதப்படுகிறது. இருப்பினும், அமமுக வேட்பாளர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், திமுக கூட்டணிக்கு சிறுபான்மையின சமுதாய வாக்குகள் ஒட்டு மொத்தமாக கிடைக்காது என்று அதிமுக கருதுகிறது.

திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கட்சிகள் கூட்டணியில் இருப்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு பலமாககருதப்படுகிறது. எனவே, இந்தமுறைவெற்றி கை நழுவிப் போகாது என்றும்,கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. கட்சிகள் என்னதான் கணக்கு போட்டாலும் வாக்காளர்கள் போடும் கணக்கே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். வாக்காளர்களின் முடிவு என்ன என்பது மே 2-ம் தேதி தெரியவரும்.

தென்காசி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்வருடம்வேட்பாளர்கட்சி2016 செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுக2011 சரத்குமார் அதிமுக2006 கருப்பசாமி பாண்டியன் திமுக2001 அண்ணாமலை அதிமுக1996 ரவி அருணன் தமாகா1991 பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ்1989 பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ்1984 வெங்கடரமணன் காங்கிரஸ்1980 சட்டநாத கரையாளர் அதிமுக1977 முத்துச்சாமி காங்கிரஸ்1971 சம்சுதீன் என்ற கதிரவன் திமுக1967 சிதம்பரம் காங்கிரஸ்1962 சுப்பையா காங்கிரஸ்1957 சட்டநாத கரையாளர் சுயேச்சை1952 சுப்பிரமணியம் காங்கிரஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x