9 முறை வென்ற தொகுதியை தக்க வைக்க விளாத்திகுளத்தில் திமுகவுடன் மல்லுக்கட்டும் அதிமுக: கூட்டணி கட்சிகள் தயவால் கரை சேரும் நிலை
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் 3-வது முறையாக களம் காணும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே இங்கு 9 முறை வென்ற அதிமுக, கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பியுள்ள திமுக வேட்பாளருடன் மல்லுக் கட்டுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கடைகோடி சட்டப்பேரவை தொகுதியான விளாத்திகுளத்தில் ஆற்றுப்பாசனம், தோட்டப்பாசனம், மானாவாரி, மீன்பிடி தொழில், பனை தொழில், கரிமூட்ட தொழில் ஆகியவை உள்ளன. மானாவாரி விவசாயமே பிரதான தொழில் ஆகும். இந்த தொகுதியில் ரெட்டியார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக நாயக்கர் மற்றும் பிற சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் 1,05,548 ஆண்கள், 1,09,991 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 2,15,543 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் போ.சின்னப்பன், கடந்த 2006-ம் ஆண்டு பொதுத்தோத்ல், 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு விளாத்திகுளத்தில் களம் கண்ட ஜி.வி.மார்க்கண்டேயன், வாகை சூடினார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து வெளியேறி 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது திமுகவில் இணைந்து 3-ம் முறையாக களத்தில் நிற்கிறார்.
1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளாத்திகுளம் தொகுதி இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 9 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2001-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து வருவதால், அதிமுகவினர் நம்பிக்கையில் உள்ளனர். திமுக 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் இங்கு வாகை சூடியுள்ளன.
சாதக - பாதகங்கள்
தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கோலோச்சி வரும் அதிமுக, விவசாயத்துக்கு மாற்றாக தொழிற்சாலை நிறுவ நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மனக்குறை மக்களிடம் காணப்படுகிறது. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் தேவைக்கேற்ப அமையவில்லை. அதே நேரம் விவசாயக் கடன் தள்ளுபடி கைகொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. குக்கிராமங்கள் வரை வியாபித்து இருக்கும், இரட்டை சிலை சின்னம் மிகப்பெரிய பலமாக உள்ளது. பாஜக., பாமக என கூட்டணி கட்சிகளின் பலமும் சேர்ந்துள்ளது.
1996-ம் ஆண்டுக்கு பின்னர் வெற்றியை ருசிக்காத திமுக, இம்முறை வெற்றி பெறும் முனைப்பில் பாடுபட்டு வருகிறது. மார்க்கண்டேயனுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. இம்முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சியினரும் இவருக்காக களமிறங்கியுள்ளனர்.
அமமுக வேட்பாளராக கே.சீனிச்செல்வி போட்டியிடுகிறார். நாயக்கர் சமூகத்தை சேர்ந்த இவர் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். அமமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பான திட்டங்களை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிகவினரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வில்சனுக்கு ஆதரவாக சமகவினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
