

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஸ்டாலினே மதுரைக்கு வர முடிந்தது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும் கூட, அவரால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை. அப்படி ரவுடிசம் நிறைந்த மதுரை, அதிமுக ஆட்சியில்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.
மதுரையில் இன்று புறநகர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, மாலையில் நகர்ப் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் பேசினார். அவருக்கு மாநகர அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழிநெடுக மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், முனிச்சாலையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''திமுகவில் நிதியைத் தவிர்த்து எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி நிதியென்று பெயர் வைத்துக் கொண்டு நாட்டின் சொத்துகளைக் கொள்ளையடிக்கின்றனர். இந்தத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தலாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் திமுகவில் 20 வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.
ஸ்டாலின் 2 ஆண்டிற்கு முன் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறினார். குறிப்பாக என் மகன் உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். தற்போது அதே ஸ்டாலின், தனது மகனை வேட்பாளராக அறிவிக்கிறார். அதுபோல், உதயநிதியும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றார். தற்போது தந்தையின் விருப்பப்படி அரசியலுக்கு வருவதாகக் கூறுகிறார். இப்படி தந்தையும், மகனும் மட்டுமில்லாது திமுகவினர் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை, காலசூழ்நிலைக்குத் தகுந்தவாறு அவர்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர்.
திமுகவில் பிரச்சாரம் செய்ய ஆளில்லையா? துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி போன்ற மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேரன் வயது உள்ள உதயநிதி பிரச்சாரம் செய்ய வருகிறார். அவர்களை திமுக மூத்த நிர்வாகிகள் ஓடிச் சென்று வரவேற்கிறார்கள். உதயநிதி கார் கதவை நேரு குனிந்து திறந்து விடுகிறார். அப்படி கார் திறந்து விடாவிட்டால் அவர் பதவியில் இருக்க முடியாது. ஆனால், அதிமுக ஜனநாயகக் கட்சி. சாதாரணத் தொண்டன் கூட, எம்எல்ஏ, அமைச்சராக ஏன் முதல்வராக முடியும். ஸ்டாலின், என்னைப் போல் சொல்ல முடியுமா?. அவர் அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரைமுருகன் போட்டிக்கு வந்துவிடுவார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஸ்டாலினே மதுரைக்கு வர முடிந்தது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும் கூட, அவரால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ரவுடிகள் அராஜகம் மதுரையில் இருந்தது. தற்போது மதுரையை அதிமுக அமைதிப் பூங்காக வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 2006 முதல் 2011 ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் இருண்ட ஆட்சி நடந்தது. அதனால், மக்கள் எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.