

காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரைத் தகுதியான வேட்பாளராக அறிவித்த தேர்தல் ஆணைய உத்தரவிற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. கோவை தெற்கு அதிமுக வென்ற தொகுதியாக இருந்தாலும் பாஜகவுக்கு விட்டுக்கொடுத்தார்கள். அங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகளில் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியும் அடக்கம் என்பதால் அதன் தலைவர் கமல்ஹாசன் அங்கு போட்டியிடுகிறார். மும்முனைப் போட்டியில் மூன்றாவது முனையாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
போட்டி கடுமையாக உள்ள நிலையில், மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக அவரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மயூரா ஜெயக்குமார், அவரது மயூரா ரேடியோஸ் நிறுவனத்திற்காக கோவையைச் சேர்ந்த சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து மின்னணுச் சாதனங்களை வாங்கியதில், மீதித் தொகையைத் தராததால் அது தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வேட்பு மனுவில் இந்தக் கடன் குறித்த தகவலைத் தெரிவிக்காததால், அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திடம் சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான பிரபு தேவராஜன் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் மயூரா ஜெயக்குமாரின் மனு ஏற்கப்பட்டு விட்டதால், அவரை வேட்பாளராக அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சீனு எண்டர்பிரைசஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.