

புதுச்சேரியில் இதுவரை ரூ.35 கோடிக்கு தங்க நகைகள், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 93 பறக்கும் படைகள், 30 சுழற்சி முறை கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் 30 தொகுதிகளிலும் பணியாற்றுகின்றன. மாநில எல்லைகளில் 35 சுங்கச் சாவடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் பிடிபட்ட பொருட்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் முழுக்க இதுவரை ரூ.35 கோடிக்கு தங்க நகைகள், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.3.8 கோடி வரை பணமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.55 லட்சம் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு 140 பேர் கைதானார்கள். 44 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலால் விதிகளை மீறியதாக 7 மதுபான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ரூ. 27.4 கோடி மதிப்பிலான தங்கம், நகைகள் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. இலவசப் பொருட்களாக வாக்காளர்களுக்குத் தர வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டன".
இவ்வாறு சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.