தேர்தல் விதிமீறல்: தங்கம் தென்னரசு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் விதிமீறல்: தங்கம் தென்னரசு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திருப்பதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த 19-ம் தேதி காரைபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அவியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கவும் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

திருச்சுழி தேர்தல் அதிகாரியும் தங்கம் தென்னரசுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in