

உதகை காந்தல் பகுதியில் நுழைய வேலூர் இப்ராஹிமுக்கு தமுமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த வேலூர் இப்ராஹிம், பாஜகவினர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக வேட்பாளர் மு.போஜராஜனுக்கு ஆதரவாக வேலூர் இப்ராஹிம் இன்று பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், மாலை உதகை காந்தல் பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, அப்பகுதிக்கு நுழைய தமுமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ரோஹிணி தியேட்டர் சந்திப்பிலேயே வேலூர் இப்ராஹிம் நிறுத்தப்பட்டார்.
இதற்கு அவரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காந்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளச் செல்வோம் என்றனர். பின்னர் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கூடுதல் எஸ்.பி., சார்லஸ், அதிரடிப்படை கூடுதல் எஸ்.பி. மோகன்நிவாஸ், டிஎஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், ரோஹிணி தியேட்டர் சந்திப்பில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்ய அனுமதித்து, அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
வேலூர் இப்ராஹிம் கூறும்போது, "இஸ்லாமியர்கள் எங்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்கின்றன. அதை முறியடிக்க வந்துள்ளோம். இஸ்லாமிய வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்பது ஜனநாயக விரோதமானது. போலீஸார் அனுமதி வழங்கியதால், இஸ்லாமிய மக்களிடம் வாக்குச் சேகரித்தேன்" என்றார்.