புதுவை மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு; மத்திய அரசு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் பதில்

புதுவை மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு; மத்திய அரசு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் பதில்
Updated on
1 min read

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கும் புதுவை அமைச்சரவையின் முடிவு சட்டவிரோதம் என்பதால் அதனை நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதனால் அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதில் அப்படித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்றது.

இதேபோல் தமிழகத்தைப் பின்பற்றி புதுவை மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், புதுவை அமைச்சரவையின் முடிவு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும். தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை” என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், புதுவை அரசின் அமைச்சரவை தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனால் புதுவை அமைச்சரவை முடிவு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மாணவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் . இது அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்றும், உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். மத்திய அரசினுடைய முடிவு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in