

கலைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து கிளார்க் வேலைக்குக் கூட சாமானியர்கள் நுழைய முடியாத சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக வேட்பாளர் கா.ராமசந்தினை ஆதிரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
“திராவிடக் கட்சிகள் கொள்கை போராட்டம் கொண்டது என்பதால் பாஜகவை எதிர்ப்பதிலும், தமிழகத்தில் பாஜகவைக் காலூன்றாமல் தடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
திமுக தலைவர் தேர்தல் அரசியலுக்காக வேலைக் கையில் தூக்கவில்லை. அவர் கையில் வாள் கொடுத்தபோது தூக்கியுள்ளார். திமுகவில் ஆத்திகரும் இருக்கிறார்கள், நாத்திகர்களும் இருக்கிறார்கள். ஆனால், திராவிடர் கழகத்தின் கொள்கை வேறு.
மக்களின் அறியாமையில் இருந்து அவர்களைக் காக்க நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறது. மேற்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலம் மட்டுமல்ல எல்லா மண்டலத்திலுமே அதிமுக தோல்வியடைவது உறுதி.
காங்கிரஸில் ஜனநாயக ரீதியில் கருத்து சுதந்திரம் அளிப்பதால் கோஷ்டி பூசல் வெளியில் தெரிகிறது. அதிமுகவிலும் கூட பலர் வெளியில் வந்து வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று கூறி வருகின்றனர். அமைச்சர்களுக்குக் கூட அங்கு எதிர்ப்புகள் உண்டு.
நீட் தேர்வின் மூலம் சாமானிய மக்கள் மருத்துவம் படிக்க இயலாத நிலையினைக் கொண்டு வந்த மத்திய அரசு, கலைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்து சாதாரண கிளார்க் வேலைக்கு கூட சாமானியர்கள் நுழைய முடியாத சூழலை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியாக பணியமர்த்தப்பட்டு, தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மக்கள் காப்பாற்றப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் செழிக்கும்.
மேலும், ஸ்டாலின் மீது இதுவரை எந்த ஊழல் புகாரும் இல்லை. அவர் மக்களுக்கு விடியல் தர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தொடர்ந்து தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வருகிறார்” என்று கி.வீரமணி பேசினார்.