Published : 25 Mar 2021 04:22 PM
Last Updated : 25 Mar 2021 04:22 PM

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லத் தடை: 13-வது மாதமாக நீட்டிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு 13-வது மாதமாக நீடிக்கிறது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைக் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு, தொடர்ந்து நீடிக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலையில், 14 கி.மீ. தொலைவு உள்ள அண்ணாமலையில், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தரகள் பவுர்ணமி கிரிவலம் செல்கின்றனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது, தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு அனுமதி வழங்கினால், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரும் பக்தர்களால், தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 28-ம் தேதி அதிகாலை 3.13 மணிக்குத் தொடங்கி 29-ம் தேதி அதிகாலை 1.18 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம். கரோனா பரவாமல் தடுக்க, மக்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் மாதக் கணக்குப்படி தொடர்ந்து 13-வது மாதமாகக் கிரிவலம் செல்ல, பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x