Published : 25 Mar 2021 02:25 PM
Last Updated : 25 Mar 2021 02:25 PM

இது தேர்தல் அல்ல, போர்: தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக பாதுகாக்கும்: ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

திருவண்ணாமலை 

50 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை சிதைக்கப் பார்க்கின்றனர் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்), சேகரன் (போளூர்), அன்பழகன் (ஆரணி), ஜோதி (செய்யாறு), அம்பேத்குமார் (வந்தவாசி) ஆகியோரை ஆதரித்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 25) வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, இந்துக்கள் விரோதி திமுக என மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்கிறது. யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக திமுக இருப்பது கிடையாது. அனைவரது உணர்வுக்கும் அமைய உள்ள எனது அரசு மதிப்பளிக்கும். அனைவரையும் மதித்துதான் என்னுடைய ஆட்சி இருக்கும் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன்.

மத உணர்வுகளை தூண்டுபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, இது தமிழ்நாடு. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிவு கொண்டவர்கள் தமிழ் மக்கள். இதனை பாஜக புரிந்து கொள்ள 100 ஆண்டுகளாகும். அவர்கள் யோசிக்க மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்.

பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியல் இந்தியில் உள்ளது. இந்தி மொழி பேசும் மக்களுக்கான ஆட்சிதான் பாஜக. இந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்தி மொழி பேசுபவர்களை தமிழகத்தில் நுழைப்பதன் மூலம் பாஜகவை வளர்த்துவிடலாம் என சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கு முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்க்கலாம். திமுகவும், தமிழக மக்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

தமிழர்களுக்கு முன்னுரிமை

தனிப்பட்ட எந்த மொழிக்கும் திமுக எதிரி கிடையாது. இந்திக்கு என்றைக்கும் திமுக எதிரி அல்ல. இந்தியை வேண்டாம் என சொல்லவில்லை, திணிக்கக் கூடாது என்றுதான் திமுக சொல்கிறது.

வட மாநிலத்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில், அந்த மாநில மக்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் இருக்கக்கூடாதா?.

புதிய கல்வி கொள்கை மூலம் குல கல்வி கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை தடுக்கும் முயற்சியில் அதிமுக அட்சி ஈடுபடவில்லை.

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கான இடங்கள் குறைந்துள்ளன. மேலும், மாநில அரசு தேர்வுகளை மத்திய அரசின் பொதுத் தேர்வாக நடத்த வேண்டும் என சொல்வது அநியாயம். இதன்மூலம், வட மாநில மக்களை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறார்கள்.

தேர்தல் அல்ல, போர்

50 ஆண்டுகளாக பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக மற்றும் எனது ஆட்சி பாதுகாக்கும். பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என சொல்லவில்லை. ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்துக்கு எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.

இதனை தேர்தல் என கருத வேண்டாம். நம்முடைய கொள்கையை காப்பாற்றவும் மற்றும் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழகத்தைக் காப்பாற்றவும் நடக்கும் போர். இந்த போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள்.

ஒரு இடத்திலும் வெற்றி பெறாது

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற போவதில்லை. அதேபோல், அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிபெற்றால், அவர் அதிமுக எம்எல்ஏவாக இருக்கமாட்டார். பாஜக எம்எல்ஏவாக இருப்பார். இதற்கு உதாரணம், நாடாளுமன்ற தேர்தலில் ஓரே இடத்தில் வெற்றி பெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன், அதிமுக எம்.பி-யாக இல்லாமல் பாஜக எம்.பி-யாக இருக்கிறார். அவரது லெட்டர் பேடில், கட்சியின் தலைவர் படத்தை போடாமல், பிரதமர் மோடியின் படத்தை போட்டுள்ளார். பாஜகவின் அடிமையாக செயல்படுகிறார். அதனால்தான் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம்

2012-ல் ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும், இல்லையென்றால் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அதன் அடிப்படையில், தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. தமிழகம் சொன்னதை, அன்றைக்கு டெல்லி கேட்டது. இன்றைக்கு டெல்லி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக் கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு பாஜக, அதிமுக துரோகம் செய்து வருகிறது. ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தபோது, இந்தியா வெளிநடப்பு செய்துள்ளது. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என நாமும் கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மோடிக்கு நானும், நமது எம்.பி-க்களும் கடிதம் எழுதினோம். அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாமகவும் வலியுறுத்தியது. அனைவரது கோரிக்கைகளை பாஜக ஏற்காமல் அவமதித்துள்ளது. இதனை முதல்வர் பழனிசாமி கண்டிக்கவில்லை. பாஜகவும், அதிமுகவுக்கும் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

அடிமையாக இருக்கிறோம்

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக அதலபாதாளத்தில் உள்ளது. 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம். தமிழ் மண்ணில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் மதவெறியை தூண்ட வேண்டும் என சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்களது திட்டம் நிறைவேறாது. இது திராவிட மண் மற்றும் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி பிறந்த மண். மோடி மஸ்தான் வேலையெல்லாம் தமிழகத்தில் பலிக்காது. மாநில உரிமைகள் பறிபோய்விட்டது. நாம் அடிமையாக இருக்கிறோம். தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் டெல்லியில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மாநில உரிமையை மீட்டு பாதுகாக்க வேண்டும்.

கோயில்களை மூடும் பாஜக

ஆட்சி மாற்றத்துக்காக மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. சுய மரியாதையை காப்பாற்ற நடக்கக்கூடிய தேர்தல். தன்மானத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என மறந்துவிடக் கூடாது. மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளது. இதனை தடுக்கும் தேர்தல்தான் நடைபெறுகிறது. திருவாரூர் தேர் இன்று ஓடுகிறது. அதனை ஓட செய்வதர் கருணாநிதி. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தியபோது, அதனை மீட்டுக் கொடுத்தவர் கருணாநிதி. இந்து என சொல்லிக் கொண்டு கோயில்களை மூட பாஜக நினைக்கிறது. இந்துக்கு விரோதி என சொல்லப்படும் திமுக, கோயில்களை திறக்க முயற்சிக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

தி.மலைக்கு செய்ய போவது என்ன?

திருவண்ணாமலை கிரிவல பாதை மற்றும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை, தேரோடுவதற்கு வசதியாக புதைவிட மின் கம்பி அமைத்துக் கொடுக்கப்படும். திருவண்ணாமலை மலை பகுதியில் பசுமை காடுகள் வளர்க்கப்படும். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவிரி குடிநீர் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி, நெல் ஆராய்ச்சி மையம், முக்கிய நகரங்களில் தொழிற்பேட்டைகள், ஆரணியில் பட்டு ஜவுளி தொழிற்சாலை மற்றும் பட்டு ஜவுளி பூங்காவும், ஆரணி மற்றும் செய்யாற்றில் புதிய பேருந்து நிலையம், செய்யாற்றில் இஎஸ்ஐ மருத்துவமனை, வந்தவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி, கீழ்பென்னாத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு சிலை, செங்கம், கலசப்பாக்கம் மற்றும் தண்டராம்பட்டில் நறுமண தொழிற்சாலைகள், கலசப்பாக்கம், செய்யாறு, செங்கத்தில் தொழிற் பதன கிடங்குகள், உணவு பாதுகாப்பு கிடங்குகள், பெரணமல்லூரில் தானிய கிடங்கு, மேல்செங்கத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். செய்யாறு - தென்பெண்ணையாறு இணைப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். சாத்தனூர் குடிநீர் திட்டம் கடலாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். ஜவ்வாதுமலை மக்கள் நலவாரியம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றி கொடுக்கப்படும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x