

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பெயரில்தான் ராஜாவாக இருக்கிறார். ஆனால், அவர் செய்வது அனைத்தும் அட்டூழியம், அவருக்கு நாடவடக்கம் தேவை என்று முதல்வர் பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் கே.பழனிசாமி ஒத்தக்கடை, மேலூரில் இன்று (மார்ச் 25) பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
''முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பெயரில்தான் ராஜாவாக இருக்கிறார். ஆனால், அவர் செய்வது அனைத்தும் அட்டூழியம். அவர் சொல்கிறார், நான் ஸ்டாலின் அணியும் செருப்பை விட ஒரு ரூபாய் மதிப்புக் குறைந்தவனாம். ஆமாம், நான் விவசாயி என்பதால் மதிப்புக் குறைவானவன்தான். ஏழைதான். ஆனால், விவசாயி என்ற சொல்லிலே என் மதிப்பு உயர்ந்து இருக்கிறது. கண்ணுக்குக் தெரியாத காற்றில்கூட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்தான் நீங்கள். நாவடக்கம் உங்களுக்குத் தேவை.
வீட்டிற்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்று சொல்வார்கள். அதுபோல் மக்கள் இந்தத் தேர்தலில் உங்களை அடக்கிவிடுவார்கள். பொது வாழ்விற்கு வந்தவர்களுக்குப் பேச்சிலே தகுதி வேண்டும். மற்றவர்களையும், அவர்கள் பார்க்கும் தொழிலையும் சிறுமைப்படுத்திப் பேசக்கூடாது. அது உங்களுக்கும், உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை. திமுக மக்களுக்கு நன்மை செய்ததாக வரலாறு கிடையாது.
திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் நன்மை செய்வார்கள். ஸ்டாலின் தலைமையில் இருக்கும், திமுக ஒரு கம்பெனி. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, அவருக்குப் பிறகு அவரது வாரிசு. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பதவிக்கு வருவார்கள். திமுகவினர் கொள்ளையடிப்பதிலே மன்னர்கள். ரவுடிசம், அராஜகம், கட்டப் பஞ்சாயத்து செய்வார்கள்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.