

பாரபட்சம் பார்ப்பவர் நல்ல பிரதமர் அல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் தொடர்பில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்யலாம் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியதற்கு கமலஹாசன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி கொடுத்து பாரபட்சம் பார்க்கும் பிரதமர் நல்ல பிரதமர் அல்ல. எல்லா எம்எல்ஏக்களுக்கும் பலம் உள்ளது. அதை நிராகரிக்காத பிரதமரே நல்ல பிரதமர். உதயநிதி தயாரிப்பில் வெளியான படத்திற்கு நான் வாங்கிய சம்பளத்துக்கு வரியும் கட்டிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்குத் தொகுதிக்காக இதற்கு முன் என்ன செய்திருக்கிறார்? இல்லை அரசியலில்தான் என்ன செய்திருக்கிறார் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னர் விமர்சித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளதால் கோவை தெற்கு தொகுதி, தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.