

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலு திமுக வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார். எ.வ.வேலு தனது தொகுதியில் சொந்தமாக கல்லூரி நடத்தி வருகிறார்.
வேறு சில தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் செய்து வருகிறார்.
தனது பிரச்சாரத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக கண்டித்து ஸ்டாலின் பேசினார். அவர் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்யும் நிலையில் எ.வ.வேலுவும் அவருடன் பிரச்சாரத்தில் இருந்தார்.
இந்நிலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லம் என ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.
திருவண்ணாமலை மட்டுமல்லாமல் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டிலும் காலை 11-00 மணிமுதல் சோதனை நடக்கிறது. வாசலில் நிற்கும் கார்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல் சோதனையின் முடிவில்தான் தெரியவரும்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் இருக்கும்போதே அதே தொகுதியின் வேட்பாளருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் சில நாட்களுக்கு முன் மக்கள் நீதிமய்யம் பொருளாளர் வீடு, அலுவலகம் என சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.