

தபால் வாக்கு செலுத்துவோரின் பட்டியலை வழங்காமல் தபால் வாக்குகள் பெறும் தேர்தல் ஆணைய நடைமுறை எதிர்த்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தரப்பில் தொடர்ந்துள்ள அவசர வழக்கை, நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும், கரோனா பாதித்தவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தபால் வாக்கு செலுத்துவோரின் பட்டியல் கொடுக்கப்படாத நிலையில், இன்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத் தொடங்கியுள்ளதாக திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் விடுதலை ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், தபால் வாக்காளர் பட்டியலை வழங்காமல், வாக்குகள் பெறத்தொடங்கி உள்ளதாகவும், அதுதொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்ற நீதிபதிகள், நாளை வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.