

ஆசியாவின் பிரம்மாண்டமான தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகச் சொல்லப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் இன்று நடக்கிறது.
அதையொட்டி நேற்று மாலை தியாகராஜர் ஆழித் தேரில் எழுந்தருளினார். இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அதிகாலை5 மணி அளவில் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து 7:30 மணி அளவில் ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக ஆழித் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
’விழாவில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆழித் தேரோட்டத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவுக்காக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.