

தேமுதிக பொருளாளரும், விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கரோனா உறுதியானது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சதீஷின் மனைவி பூர்ணிமாவுக்கும் கரோனா உறுதியானது.
அவர்கள் இருவருடனும் பிரேமலதா தொடர்பில் இருந்ததால் அவரும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
அத்துடன் நிற்காமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இடத்திலேயே பிரேமலதாவுக்கு கரோனா பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் முயற்சித்தது. இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மதிய உணவு இடைவேளையின் போது அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை, பரிசோதனை முடிவு வெளியானது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி செந்தில் கரோனா பரிசோதனை முடிவை வெளியிட்டார்.
முன்னதாக, பிரேமலதா, "எனது பிரச்சாரத்தை முடக்க திட்டமிடுகின்றனர். அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். கரோனா பரிசோதனை முடிவு சாதமாகத் தான் இருக்கும். கட்சியினர் பத்து பேர் கொண்டு குழு அமைத்து வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி ஒன்று தான் நமது இலக்கு" என்று கூறியிருந்தார்.
அவர் நம்பிக்கைக்கு ஏற்ப பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால், அவர் வழக்கம்போல் பிரச்சாரம் செய்வார்.