காங்கிரஸ் தோற்றால் தான் திமுகவிற்கு காரைக்குடி கிடைக்கும்: திமுகவினரை கவர அமமுக வேட்பாளரின் நூதனப் பிரச்சாரம்

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் பகுதியில் பிரச்சாரம் செய்த அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி.
காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் பகுதியில் பிரச்சாரம் செய்த அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி.
Updated on
1 min read

‘‘காங்கிரஸ் தோற்றால் தான் திமுகவிற்கு காரைக்குடி தொகுதி கிடைக்கும்,’’ என திமுகவினரை கவர அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் பாஜக, காங்கிரஸ் போட்டியிடுவதால், அதிமுக, திமுக வாக்காளர்களை கவர அமமுக வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் காரைக்குடியில் பேசியதாவது: திமுகவினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள், நீங்கள் 32 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிக்களுக்கே காரைக்குடி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். காங்கிரஸ் தோற்றால் தான் உங்களுக்கு காரைக்குடி கிடைக்கும்.

இதனால் என்னை வெற்றி பெற செய்யுங்கள். இல்லாவிட்டால் 50 ஆண்டுகள் ஆனாலும் திமுகவினர் காரைக்குடியில் போட்டியிடவே முடியாது. அமமுக வெற்றி பெற்றால் தான் திமுக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல இங்கு 30 கிளைகளாக இருந்த அதிமுகவை 300 கிளைகளாக வளர்க்க பாடுபட்டவன் நான். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை அழிக்க நினைத்த பாஜகவுக்கா? உங்கள் வாக்கு. எங்களுக்கு வாக்களித்து புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள். ஹெச்.ராசாவுக்கு வாக்களித்து சாபத்தை தேடிக் கொள்ளாதீர்கள், என்று பேசினார்.

திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தியாளர்களை கவர, இவ்வாறு அமமுக வேட்பாளர் பேசி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in