பாதுகாப்பு படை சூழ வலம்வரும் ஜான் பாண்டியன்: மிரளும் தொகுதி மக்கள்

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் நேற்று பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வாக்கு சேகரித்த ஜான் பாண்டியன்.
எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் நேற்று பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வாக்கு சேகரித்த ஜான் பாண்டியன்.
Updated on
1 min read

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் பலத்த பாதுகாப்புடன் வலம்வருவதால் தொகுதி மக்கள் அவரை மிரட்சியுடனேயே காண்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு இதே எழும்பூர் தொகுதியில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் எழும்பூரில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். புரசைவாக்கத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்துக்காக ‘டெம்போ’ வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜான் பாண்டியன் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறார்.

அதேநேரம் ஜான்பாண்டியன் பாதுகாப்புக்காக அவர் உடன் பிஸ்டல், எஸ்எல்ஆர் மற்றும் இன்சாஸ் வகை துப்பாக்கிகளுடன் 4 ஆயுதப்படை காவலர்கள் வலம் வருகின்றனர். இதுதவிர சில தனியார் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எழும்பூர் தொகுதியை பொருத்தமட்டில் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்அதிகம் வாழ்கின்றனர். திமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட இதர கட்சிகளின் வேட்பாளர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது, வீடுகளில் உணவருந்துதல் என வாக்காளர்களுக்கு நெருக்கமாக தங்களை காட்டிக் கொள்கின்றனர்.

மறுபுறம் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளால் ஜான் பாண்டியனை நெருங்கி பேசவே தடையாக உள்ளதால் பொதுமக்கள் அவரை மிரட்சியுடன் பார்க்கின்றனர். இதன் காரணமாக ஜான் பாண்டியனின் தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் ஊர்வலம் போலவே இருப்பதாக தொகுதி மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக பிரமுகர்கள் முழு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறப்படும் நிலையில், ஜான் பாண்டியனின் தேர்தல் பிரச்சாரமும் பொதுமக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்பது தற்போது சிக்கலாகியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in