

விஐபிக்கள் அதிகம் வசிக்கும் சென்னை அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதியில் தற்போது திமுக சார்பில் கடந்தமுறை எம்எல்ஏவாக பதவி வகித்த எம்.கே.மோகனும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கோகுல இந்திராவும் போட்டியிடுகின்றனனர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் தொகுதியும், தொகுதி மக்களும் நன்கு பரிச்சயம் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
2-வது முறையாக திமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ள எம்.கே.மோகனுக்கு அவரது மகன் கார்த்திக், மனைவி கீதா மோகன் மற்றும் மகள்கள், மருமகன்கள் பக்க பலமாக இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகின்றனர். அதேபோல கோகுல இந்திராவுக்கு அவரது கணவர் வழக்கறிஞர் சந்திரசேகர், மகள்கள் மற்றும் மருமகன் நிரஞ்சதத்தன் என ஒட்டுமொத்த குடும்பமும் ஆளுக்கொரு அதிமுக அணியை அழைத்துக் கொண்டு வீடு தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் மார்வாடி பெண்களின் வீட்டின் அடுப்பங்கரை வரை சர்வ சாதாரணமாக சென்று பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் கோகுல இந்திராவுக்கு தொகுதி மக்கள் டீ, காபி, மோர், ஆளுயர மாலை, மலர் கிரீடம் என வரவேற்பு அளித்து வருகின்றனர். அதேபோல காலை வேளையில் பூங்கா, முற்பகலில் கட்சி வழக்கறிஞர் அணி, காரியாலயம், பிற்பகலில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிகர்கள், சாமானியர்கள் அதிகம் வசிக்கும் டி.பி.குப்பம் என திமுக வேட்பாளர் மோகனும் படுபிஸியாக வலம் வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பிரசாரத்துக்கு நடுவே அதிமுக வேட்பாளர் எஸ்.கோகுல இந்திரா நம்மிடம் பேசும்போது, “கடந்தமுறை சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஆனால் இந்தமுறை தொகுதி மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு எனது வெற்றியை இப்போதே உறுதி செய்துள்ளது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னை ஜெயிக்க வைக்கும்” என்றார்.
திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏ-வுமான எம்.கே.மோகன் பிரசாரத்துக்கு நடுவே கூறும்போது, ‘‘கரோனா காலகட்டத்தில் எனது சொந்த நிதியில் இருந்து அரிசி, மளிகை சாமான் போன்ற பொருட்களை தொகுதி முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளேன். வறட்சி காலகட்டங்களில் 4 மாதம் தினமும் 1.60 லட்சம் டன் தண்ணீர் விநியோகம் செய்துள்ளேன். எனது எம். கே.மோகன் அறக்கட்டளை மூலமாக 400 ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறேன். 600 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளேன். நான் என்ன செய்துள்ளேன் என்பது தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்தமுறை போலவே இந்தமுறையும் அண்ணாநகர் தொகுதி திமுகவின் கோட்டை என நிரூபிப்பேன்” என்றார்.