

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் நேற்று தன் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக கூட்டணியில், தேமுதிககும்மிடிப்பூண்டி, ஆவடி, திருத்தணி உள்ளிட்ட 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உடல்நலக் குறைவுகாரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், தன்னால் விருத்தாச்சலம் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இயலாது எனவும், கட்சியின் துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், உடல்நலக் குறைவால் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூடடங்களை தவிர்த்து வரும் விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி பஜாரில் தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திறந்த வேனில், மாலை 6.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வந்த விஜயகாந்த், 15 நிமிடங்கள் வேனில் நின்ற படி, மேள தாளம் முழங்க, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்களின் ஆரவாரக் குரலுக்கு மத்தியில் கைகளை அசைத்து, கும்மிடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் கே.எம். டில்லிக்கு வாக்குச் சேகரித்தார்.
தொடர்ந்து, மக்கள் கூட்டத்தில் ஊர்ந்து சென்ற வேனில், 10 நிமிடங்கள் அமர்ந்தவாறு விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொடங்கிய விஜயகாந்தின் பிரச்சாரம், சென்னை, பல்லாவரம், விருத்தாசலம், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.