

எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் கண்ணையா. இவரது மகன் பிரகாஷ், பெரம்பூர் திருவள்ளூர் சாலையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இவரது வீடு உள்ளது.
இந்நிலையில், பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீட்டில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சென்றுள்ளனர். அவர்களை கண்ணையாவின் ஆதரவாளர்கள் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். போலீஸார் வந்து, அங்குதிரண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதன் பிறகு, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பிரகாஷின் அலுவலகத்திலும் சோதனைநடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க காவல், வருவாய், வருமான வரி ஆகிய துறைகளின் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைக்கும் புகார்கள், தகவல்கள் அடிப்படையிலும் வருமான வரித் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.