Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு; ராமேசுவரம் வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: பிரதமர் மோடியும் வருவாரா?

ஏப்ரல் மாத இறுதியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் புதுடெல்லி, சென்னை மட்டுமின்றி ராமேசுவரம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2020 பிப்ரவரியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியது.

இதையடுத்து, பிரிட்டனின் வர்த்தக நடவடிக்கைகளை முடுக்கிவிடும் விதமாக, வளர்ந்த நாடுகளுடன் அந்நாட்டு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் போரிஸ்ஜான்சன் வருகை தருவதாக இருந்தது. இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்றுவிட்டு இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனைநடத்துவதாகத் தகவல் வெளியானது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து இந்திய சுற்றுப் பயணத்தை போரிஸ் ஜான்சன் தற்காலிகமாக ரத்து செய்தார்.

இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜின் பிங் பிரதமர்நரேந்திர மோடியுடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது போன்று, போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பையும் தமிழகத்திலேயே நடத்த உள்ளதாகவும் இதற்காக ராமேசுவரம் தீவு தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக7 பேர் கொண்ட பிரிட்டன் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சமீபத்தில் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பிரிட்டன் பிரதமரின் ராமேசுவரம் பயணம் ஏப். 24-ல் இருந்து ஏப்.26 ஆகிய 3 நாட்களில் ஒருநாள் நடைபெறலாம்.

இந்நிகழ்ச்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நிகழ்ச்சி உறுதி செய்யப்படும் பட்சத்தில் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வந்து, அங்கிருந்து தனி ரயில் மூலம் பாம்பன்பாலத்தை பார்வையிடுவார். அங்கிருந்து கார் மூலமாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரிட்டன் பிரதமர் அழைத்து வரப்படலாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரம் வெளியாகலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x