Last Updated : 25 Mar, 2021 03:14 AM

 

Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

விசைத்தறியாளர் கடன் விவகாரம் உட்பட வரிசைகட்டி நிற்கும் கோரிக்கைகள்: சூலூர் தொகுதியில் அதிமுகவின் வெற்றி தொடருமா?

கோவை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், கோவை மாவட்டத்தின் ஒருபக்க நுழைவுவாயிலாக அமைந்துள் ளது சூலூர் தொகுதி. விவசாயமும், நெசவும் தொகுதியின் பிரதான தொழில்களாக உள்ளன. முக்கிய அடையாளங்களில் ஒன்றாக சூலூர் விமானப் படைத் தளம் உள்ளது.

தொகுதியில் வரும் பகுதிகள்

மோப்பிரிபாளையம், சாமளாபுரம், காங்கேயம்பாளையம், சென்சஸ் டவுன், சூலூர், பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சிகள், சூலூர் மற்றும்சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஏராளமான கிராமங்கள் தொகுதியில் அமைந்துள்ளன. பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட சில பகுதிகள், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர்,ராசிபாளையம், கே.மாதப்பூர், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி, கலங்கல்,பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செலக்கரிசல், வதம்பச்சேரி, செஞ்சேரிப் புதூர், செஞ்சேரி உள்ளிட்ட கிராமங்கள் சூலூர் தொகுதியில் உள்ளன.

கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான் மையாக வசித்து வந்தாலும், தேவர், நாயக்கர், ஒக்கலிக கவுடர், தாழ்த்தப் பட்ட சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர்.

முக்கிய பிரச்சினைகள்

விசைத்தறிகள் அதிகம் உள்ள சூலூரில் நெசவுத்தொழில் நலிவடைந்து வருவதால், நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக நெசவாளர்கள் கூறுகின்ற னர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி யாளர்கள் தகுந்த கூலி கிடைக்காமல், சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அனைவரும் நெசவாளர்களாக இருந்த நிலை மாறி, பலர் பின்னலாடை தொழிலுக்கு சென்று விட்டனர். வங்கிகளில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஜப்தி நடவடிக்கைகளுக்கு உள்ளாகிவரும் நெசவாளர்கள், தமிழக முதல்வர் கடந்த 2019-ம் ஆண்டு வாக்குறுதி அளித்தபடி வங்கிக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களால், நிலங்களை இழக்கும் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். பல கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் மற்றும் ஆழ்குழாய் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. நீராதாரமான நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதால் ஆறு மாசுபட்டுள்ளது. கெளசிகா நதியும் வறண்டுதான் உள்ளது. இதனால் ஆற்று நீர் பாசனத்துக்கு வழியில்லை.

நிலத்தடி நீர் பாசனம்தான் விவசாயத்துக்கு கை கொடுக்கிறது. ஆனால், நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளங்கள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. ஆச்சான் குளம், சூலூர் பெரிய குளம், சின்ன குளம், சாமளாபுரம் குளம் ஆகியவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதுடன், கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் குளங்களில் விடப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை தவிர, சூலூர் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அரசு கலைக் கல்லூரி கொண்டு வர வேண்டும், கோவையில் இருந்து தெற்கு மற்றும் டெல்டா மாவட் டங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ள திருச்சி சாலையை விபத்துகள் இல்லாத போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் மேம்படுத்த வேண்டும், சூலூரை மையப்படுத்தி தொழிற்பேட்டை ஏற்படுத்தவேண்டும், சோமனூரில் ஜவுளிச்சந்தை ஏற்படுத்தித் தர வேண்டும், சூலூர் படகுத் துறையை மேம்படுத்த வேண்டும் என்பன தொகுதி மக்கள் முன் வைக்கும் பிற சில கோரிக் கைகள்.

களம் காணும் வேட்பாளர்கள்

சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.பி.கந்தசாமிக்கே மீண்டும்வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கொம தேக சார்பில் ப்ரீமியர் செல்வம் (எ) காளிசாமி நிறுத்தப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம், அமமுக,நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

சில கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டாலும், விசைத்தறியாளர்கள் கடன்தள்ளுபடி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, நீர்நிலைகள் தூர்வாரப் படாதது உட்பட நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றுக்கு மத்தியில், 4-வது முறையாக வெற்றியை தக்கவைக்க அதிமுகவும், முதன்முறையாக தொகுதியில் கால் பதிக்க திமுக அணியும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இதுவரை வென்றவர்கள்

மீண்டும் சூலூர் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல்களையும், 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது.

2011-ல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இரண்டாம் இடத்தை பெற்றார். 2016-ல் அதிமுகவை சேர்ந்த ஆர்.கனகராஜ் ஒரு லட்சத்து 977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி.மனோகரன் 64,346 வாக்குகள் பெற்றார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட மந்த்ராசலம் 13,517 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட தினகரன் 13,106 வாக்குகளும் பெற்றனர். ஆர்.கனகராஜ் உயிரிழந்ததால், கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.கந்தசாமி ஒரு லட்சத்து 782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x