

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொகுதிக்குட்பட்ட கல்லாமேடு, எஸ்.கார்னர், சாலைப் பகுதி, சுண்ணாம்புக் காளவாய், பெரியசாமி வீதி, பாரதி நகர், பிருந்தாவன் சர்க்கிள், குறிச்சி நகர், லவ்லி கார்டன், திருவள்ளுவர் நகர், திருமூர்த்தி நகர், வெற்றிலைக்கார வீதி, மாரியம்மன் கோயில் திடல், ராஜநாயக்கர் தோட்டம், மூவேந்தர் நகர், ரைஸ் மில் ரோடு, ராஜகோபால் நகர், சாய் கார்டன் ஜெ.ஜெ.நகர், எம்.எஸ்.கார்டன், ஞானபுரம், அம்மன் காலனி, குமரன் கார்டன், காமராஜர் வீதி, நேரு வீதி வழியாக சிந்து நகர், கிருஷ்ணசாமி நகர், பெருமாள்சாமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று வாக்குசேகரித்தார்.
அப்போது எஸ்.பி.வேலுமணி பேசும்போது,‘‘நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதில்லை. இத்தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற எம்.பி, அதன் பின்னர், தொகுதிக்கு வரவில்லை.
கரோனா காலத்தில் கூட எம்.பிவரவில்லை. ஆனால், நாங்கள்இத்தொகுதியில் சாலை வசதி,சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.
கரோனா காலத்தில் நான் கட்சி வேறுபாடு இல்லாமல், இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், 23 வகையான பொருட்களை கொடுத்துள்ளேன்.
நோய் எதிர்ப்புச் சக்திக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அடங்கிய தொகுப்பையும் வழங்கியுள்ளேன். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக தலைவர் திட்டமிட்டார்.
ஆனால், அதை தடுக்க நான் உள்ளிட்ட சிலர் பாடுபட்டோம். அதனால், திமுக தலைவர் என்னை எதிரியாக பார்க்கின் றார். நான் மக்களோடு மக்களாகஇருக்கிறேன். நான் அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர், கோவையில் கட்டப் பஞ்சாயத்து இல்லை. நில அபகரிப்பு இல்லை.சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. எனவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என்றார்.
பிரச்சாரத்தின்போது, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நடிகர் ரவி மரியா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.