Published : 11 Nov 2015 03:19 PM
Last Updated : 11 Nov 2015 03:19 PM

வெள்ள நிவாரணப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்; கடலூருக்கு அமைச்சர்கள் குழு விரைந்தது

வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கனமழை யால் கடுமையாக பாதிக்கப் பட்ட கடலூரில் நிவாரணப் பணி களை விரைவுபடுத்த 5 அமைச்சர் களை அனுப்பி வைத்துள்ளார். மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 9-ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன்காரணமாக வட கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிகனமழை மற்றும் சூறைக் காற்றால் கடலூர் மாவட்டம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரி களுடன் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வ நாதன், ஆர்.வைத்திலிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதய குமார், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை செயலர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா மற்றும் துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 8,9 ஆகிய தேதிகளில் மட்டும் கடலூரில் 26.6 செ.மீ. மழை பெய்துள்ளதால், அம்மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில், உயர் அதிகாரிகள் 9-ம் தேதி முதல் கடலூரில் முகாமிட்டு, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரகப்பகுதிகளில் 25 ஆயிரம் பேர், நகரப்பகுதிகளில் 4 ஆயிரம் பேர் என மழையால் பாதிக்கப் பட்ட 29 ஆயிரம் பேர் பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. தலா 2 துணை ஆட்சியர்கள் தலைமை யில் 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தப் பணிகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 துணை ஆட்சியர்கள், 23 சார்நிலை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மழை காரணமாக தடை பட்டுள்ள மின் விநியோகத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 683 கிராம ஊராட்சிகளில், 430 ஊராட்சிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் விநியோகம் தடைபட்டபோது ஜெனரேட்டர்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இன்னும் மின் விநியோகம் சீரமைக் கப்படாத பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

மருத்துவ முகாம்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தலை மையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 37 நகரும் மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வடலூர் - கும்ப கோணம் நெடுஞ்சாலையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தேங்கியுள்ள வெள்ளம் வடிந்ததும், பயிர்ச்சேதம் குறித்து முறையாக ஆய்வு செய்யப் பட்டு, நிவாரணத் தொகை உடனடி யாக வழங்கப்படும். கடலூர், தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்தில் இருந்து 100 வல்லங்கள் கெடிலம் ஆற்று வெள்ளத்தால் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்டன. அவற்றில் 40 வல்லங்கள் கண்டறியப்பட்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப் படுகிறது.

5 அமைச்சர்கள்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும். கால்நடை இழப்பு, குடிசை சேதங்களுக்கும் நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்படும். கடலூரில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தி லிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x