அதிமுகவுக்கு தபால்வாக்கு அளிக்க ஆசிரியர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு: தென்காசி எம்எல்ஏவின் மனைவி மீது திமுக புகார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தென்காசி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரனிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பவர் செல்வமோகன்தாஸ் பாண்டியன். இவரது மனைவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவர் பள்ளிக்குச் செல்லாமல், தேர்தல் பணிக்கும் செல்லாமல் உள்ளார். அவர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, அந்த பள்ளி தலைமை ஆசிரியரின் செல்போனில் இருந்து ஆசிரியர்களை தொடர்புகொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு தபால் வாக்கு அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார். மீண்டும் தனது கணவர் வெற்றிபெறுவார் என்றும், அதிமுகவுக்கு தபால் வாக்கு அளிக்காவிட்டால் இடமாறுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டி வருகிறார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்.

இதேபோல், தென்காசி மாவட்ட த்தில் அதிமுக வேட்பாளர்களை பல்வேறு கிராமங்களில் மக்கள் தடுத்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால், ஆளும் அரசு காவல் துறையை வைத்து மக்களை அச்சுறுத்துகிறது.

அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in