

வருமானச் சான்றிதழ் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் அரசு திருமண உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பட்டதாரி பெண் குறித்து ‘தி இந்து’-வில் கடந்த 5-ம் தேதி செய்தி வெளியானது.
‘செக்யூரிட்டி கார்டு பணியில் இருக்கும் கணவரின் வருட வருமானம் ரூ.72 ஆயிரத்தை வருமானச் சான்றிதழில் ரூ.84 ஆயிரம் எனக் குறிப்பிட்டு வழங்கியதால் அரசு திருமண உதவித்தொகை பெறமுடியாமல் கடன் பெற்று நிற்கிறோம்’ என்பதை அப் பெண்ணின் தாய் சாந்தி துரைசாமி குறிப்பிட்டிருந்தார்.
இவரைப் போலவே, வருமானச் சான்றிதழ் காரணமாக அரசு திருமண உதவித்தொகை பெறமுடியாமல் போனதாக வாசகர்கள் சிலர் ‘உங்கள் குரல்’ பகுதியில் தெரிவித்திருந்தனர்.
சோமனூர் ஆட்டோ ஓட்டுநர் மருதுபாண்டியன் என்பவர் கூறும்போது, ‘தனது 2-வது பட்டதாரி பெண் திருமணத்துக்காக அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தோம். வருமானச் சான்றிதழில் ரூ.83 ஆயிரம் என குறிப்பிட்டு வந்தது. அதிகாரிகளிடம் கேட்டபோது, மீண்டும் வருமானச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். அதன்படி, ரூ.73 ஆயிரம் என குறிப்பிட்டு 2-வதாக வருமானச் சான்றிதழ் வந்தது.
ஆனால் அதற்குள் மகளின் திருமணம் முடிந்துவிட்டதால் திருமண உதவித் தொகை கிடைக்காது என்று சொல்லிவிட்டனர். பலவகைகளில் முயற்சி செய்தும் இதுவரை கிடைக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
கணேஷ்குமார் என்ற வாசகர் ‘உங்கள் குரல்’ பகுதியில் கூறுகையில், ‘இ-சேவை மையத்தில் ஏற்கெனவே நான் பணியாற்றிவிட்டு தற்போது விலகி விட்டேன்.
வருடத்துக்கு ஒருமுறைதான் வருமானச் சான்றிதழ் தரமுடியும் என்று இசேவை மையத்திலோ, அரசு அலுவலகங்களிலோ கூறுவதில்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இருப்பிட, சாதி, வருமானச் சான்றுகளை உரிய அலுவலகங்களில் பெறமுடியும். இதைப் பெறுவதில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
எனவேதான் அப்பாவி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்படுபவர்கள் முறையாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்’ என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இசேவை மைய அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது, ‘விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை பதிவிட்டு உரிய அலுவலகங்களுக்கு அனுப்புவதும், அலுவலர்கள் தரும் சான்றிதழைப் பெற்று உரியவர்களுக்கு கொடுப்பது மட்டும்தான் எங்கள் பணி.
ஒருவர் உரிய ஆவணங்களுடன் எத்தனை முறை, எத்தனை பேருக்கு விண்ணப்பித்தாலும் அதற்குரிய சான்றிதழை பெற்றுத்தந்து விடுகிறோம். ஒரு முறை வருமானச் சான்றிதழ் தந்துவிட்டு அடுத்த வருடம்தான் அடுத்த வருமானச் சான்றிதழ் தரமுடியும் என்றெல்லாம் எதுவும் கிடையாது’ என்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘முறையான ஆதாரங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் உரிய சான்றிதழ்கள் அளிக்கப்படுகிறது’ என்றனர்.