

விளவங்கோடு தொகுதியில் சொந்த கட்சிக்குள் நிலவும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் காங்கிரஸ் வேட்பாளர் தவிக்கிறார். மதத்தை தாண்டி நடுநிலையாளர்கள் வாக்குகளைப் பெற போராடுகிறார் பாஜக வேட்பாளர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடந்த இரு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தொடர்ச்சியாக இருமுறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் விஜயதரணி.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி விளவங்கோடு. கடந்தமுறை 4 முனைப்போட்டியைச் சந்தித்த நிலையில், இம்முறை, பலம் வாய்ந்த திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவுடன் அணி சேர்ந்து பாஜகவும் இத்தொகுதியில் மோதுகின்றன. எனவே, மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, பாஜக வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோர் இடையேதான் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
விளவங்கோடு தொகுதியில் இத்தேர்தலின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் விஜயதரணி உள்ளார். கடந்த 2016 தேர்தலின்போது விஜயதரணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என, காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகோஷம் இப்போதும் எழுந்தது. காங்கிரஸ் கட்சி தனக்குஒதுக்கப்பட்ட பல்வேறு தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த போதும், இத்தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பை மிகவும் பின் தங்கியே வெளியிட்டது. கடும் போராட்டத்துக்குப் பிறகே இம்முறை சீட் பெற்றிருக்கிறார் விஜயதரணி.
தொகுதியில் பெரும்பாலும் விஜயதரணி இருப்பதில்லை என, அவர் கட்சியினரே எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், தொகுதிக்கு பெயர் சொல்லும் அளவிலான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது பெரும் அதிருப்தியாக உள்ளது.
தற்போதும், விஜயதரணிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்து, போட்டி வேட்பாளர்களாக களம் காணும் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி.
இவர்களில் காங்கிரஸ் நிர்வாகியான சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் சீட் கிடைக்காத விரக்தியில், விஜயதரணிக்கு எதிராக சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். இவர் ஒக்கிபுயல் மற்றும் பேரிடர் காலங்களில் தொகுதி மக்களுக்கு தான் செய்த சேவைகளைச் சொல்லி தீவிரமாக வாக்கு கேட்டு வருகிறார்.
கேரள எல்லையான களியக்காவிளை வரை பரந்துள்ள விளவங்கோடு தொகுதியில் நாடார், மீனவர்கள், நாயர், மற்றும் மலையாள மொழிபேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். பாஜக வேட்பாளர் ஜெயசீலன் இத்தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பது அவருக்கு பலமாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி கட்சிகளின் பலமும், மதம் சார்ந்த எதிர்ப்பு வாக்குகளும் அவருக்கு உதவாது. பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் காட்டும் தீவிரம், கூட்டணி கட்சியான அதிமுக தரப்பில் இல்லை.
தனது கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்களை விஜயதரணி எப்படி சமாளிக்கப் போகிறார்? மதத்தைத் தாண்டி நடுநிலையாளர் வாக்குகளை ஜெயசீலன் எப்படி கவரப்போகிறார்? என்பதே விளவங்கோடு தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகள்.