

நேபாளத்தில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குமரி வீரருக்குஅவரது சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அண்டுகோடு ஈந்திகாலையைச் சேர்ந்த ரமேஷ், ஜாவின் மகன் அனூப் (19). சிறு வயதில் இருந்தே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் மிக்க இவர், மாவட்டஅளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றார். பின்னர், மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.
தொடர்ந்து, அகில இந்தியஅளவில் பஞ்சாபில் நடந்த தடகளப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கமும், கோவாவில் நடந்த அகில இந்த ஓட்டப்பந்தயத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார். சமீபத்தில், நேபாளத்தில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் அனூப் பங்கேற்றார். அவர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
தங்கப்பதக்கம் வென்ற அனூப் நேற்று அவரது சொந்த ஊரான அண்டுகோட்டுக்கு வந்தார். மார்த்தாண்டம் ரயில் நிலையத்திலும், மேல்புறம் சந்திப்பிலும் அவருக்கு, பட்டாசு வெடித்து, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து அனூப்பை வரவேற்றனர். அப்போது, அனூப் தேசிய கொடியை ஏந்தி நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனூப் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.