

மக்களாட்சிக்கும், மன்னராட்சிக் கும் இடையே நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் மக்களாட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘முதல்வர் பழனிசாமி விவசாயி, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் வியாபாரி. நமக்கு விவசாயி தான் வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அதிமுக நடத்துவது மக்களாட்சி, திமுக மன்னராட்சியை நடத்தும். எனவே, மக்களாட்சிக்கும், மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் மக்களாட்சியாக அதிமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு தர வேண்டும்.
அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்’’ என்றார்.