

திமுகவும், அதிமுகவும் போட்டிப்போட்டு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவித்துள்ளதால் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தற்போது நகைக்கடன் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், உண்மையான அவசரத் தேவைகளுக்கு மக்கள் கடன் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதாக, தமிழக அரசு அறிவித்தது.
திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்றும் அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து கூட்டுறவுவங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் பட்டியலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடியால் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்க மறுப்பதாகவும், அதனால் பொதுமக்கள் உண்மையான அவசரத் தேவைகளுக்கு கடன் பெற முடியாமல் தவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
நகைக்கடன்களை ரத்து செய்வதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், பொதுமக்களுக்கு, ரத்து செய்த இந்தத் தொகையை தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு திருப்பித் தர 5 ஆண்டுகள் வரை ஆகும்.
அதுவும் சிறிது சிறிதாகத்தான் அந்தத் தொகையைத் தருவார்கள். இதனால், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்களில் இருந்து நேரடியாக நிதி பெறும் மத்திய கூட்டுறவு வங்கிகள் அச்சப்பட தேவையில்லை. அவர்கள் தாராளமாக கடன் வழங்கலாம். ரத்து செய்யலாம்.
ஆனால், உறுப்பினர்களின் டெபாசிட் தொகையை கொண்டு நகைக்கடன் வழங்கும் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களுக்கு தமிழக அரசின் நகைக்கடன் அறிவிப்பு ரத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு கடனை ரத்து செய்து நகைகளை திருப்பி கொடுத்துவிடுவோம். ஆனால், இந்த தொகையை அரசு திருப்பி தர தாமதமாவதால் உறுப்பினர்கள் அவர்கள் டெபாசிட் செய்த தொகையை திருப்பி கேட்கும்போது எங்களால் அவர்களுக்கு கொடுக்க முடியாது.
கிராமங்களை சேர்ந்த அவர்கள் டெபாசிட் தொகையை அவசரத்திற்கு திருப்பி கேட்டு வங்கிகளுக்கே நேரடியாக வந்து தொந்தரவு செய்வார்கள்.
மேலும், நகைக்கடன் ரத்து எந்த தேதி வரை ரத்து செய்யப்படும் என்று இன்னும் தெளிவான விவரம் இல்லை. அதனால், தற்போது வைக்கப்படும் நகைகளுக்கும் சேர்த்து ரத்து செய்யப்படாலாம்.
அதனால், நிதியில்லாத கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் தற்காலிகமாக நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால், மற்ற வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்படுகிறது, ’’ என்றனர்.