

வாக்குப்பதிவுக்கு முன்பாக மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பது, இவிஎம் பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்துவது போன்ற திமுகவின் கோரிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கட்கிழமை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 ஆண்டுகள் பழமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும், வாக்குப்பதிவு மையத்தை இணையதளத்தில் தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும், வாக்குகள் பதிவான பிறகு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கடந்த வாரம் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், “பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் அல்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின்போது ஒளிபரப்பினார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவதற்கான கூட்டம் இன்னும் நடைபெறவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரப் பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு அறையில் தாசில்தார் ஒருவர் சென்றதால் நடவடிக்கைக்கு உள்ளானார். ஆகவே, ஜாமர் பொருத்துவது மிகவும் அவசியம்” என்று வில்சன் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபாலன், “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை. ஆனால், எந்தெந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் எனப் பட்டியல் தயாராகி வருகிறது. மதுரை தொகுதி பாதுகாப்பு அறைக்குள் தாசில்தார் சென்றாரே தவிர எதிலும் மாற்றம் செய்யவில்லை. அந்த விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வேண்டும்” எனக் கோரினார்.
இதையடுத்து, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்துப் பதற்றமான வாக்குச்சாவடிகளை இந்த வாரத்திற்குள் கண்டறிய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வாக்குப்பதிவுக்கு முன்பாகவும் மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பது, அங்கீகரிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியல், விவிபேட் இயந்திரங்களை அதிகரிப்பது, தேர்தலுக்குப் பிறகு பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்துவது ஆகிய மனுதாரரின் கோரிக்கை குறித்து திங்கட்கிழமை (மார்ச் 29) தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுகிறது என வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்தல் ஆகியவை குறைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுகிறது என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.