Last Updated : 24 Mar, 2021 08:01 PM

 

Published : 24 Mar 2021 08:01 PM
Last Updated : 24 Mar 2021 08:01 PM

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கே நேரடியாகச் சென்று தபால் வாக்கு பெறும் பணி: புதுச்சேரியில் நாளை தொடக்கம் 

மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா நோயாளிகள் ஆகியோரின் முகவரிக்குச் சென்று தபால் வாக்கு பெறும் பணி நாளை புதுச்சேரியில் துவங்குகிறது என்று புதுச்சேரி மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இதுவரை ரூ. 40.5 கோடி பணம், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் தகவல்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது- அதிகாரிகள் இதுவரை ஒரேஒரு முறை மட்டுமே செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர் என்று இந்து தமிழ் இணையத்தில் இன்று செய்தி வெளியானது.

அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பூர்வா கார்க், " இனி எந்நேரமும் அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள்.

முக்கிய தகவல் விவரம் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர், தலைமை தேர்தல் அதிகாரி உதவியாளர், தேர்தல் பொறுப்பு காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம், தொடர்ந்து தினந்தோறும் நடைபெறும் விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்று உறுதி தந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"புதுச்சேரியில் வாக்களிக்க வர இயலாத வாக்காளர்களை அடையாளம் கண்டு தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட 2419 பேர், மாற்றுத்திறனாளிகள் 1149 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் 19 பேர், மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகள் 4 பேர், அத்தியாவசிய பணியில் உள்ளோர் 24 பேர் என 3605 பேர் தபால் வாக்கு பெற விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 80வயதுக்கு மேற்பட்டோர், கரோனா நோயாளிகள் ஆகியோர் தந்த முகவரிக்குச் சென்று தபால் வாக்கு பெறும் பணி நாளை (மார்ச் 25) துவங்குகிறது.

வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை இப்பணி நடைபெறும். இதற்காக தனியாக 31 வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு தனியாக வாகனம், வாக்குப்பெட்டி ஆகியவை தரப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் விருப்ப மனுவில் தந்துள்ள செல்போனில் வீட்டுக்கு வரும் நேரம், தேதி விவரம் தெரிவிக்கப்படும்.

புதுச்சேரியில் பறக்கும் படை, சோதனைச் சாவடிகளில் இதுவரை ரூ. 40.59 கோடிக்கு நகை, ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் நகைகள் மட்டும் ரூ. 34.93 கோடி மதிப்புடையவை ஆகும்.

நெல் மூட்டைகள் பிடித்தபோது அவரிடம் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் இல்லாததே காரணம். உரிய ஆவணங்கள் சரிபார்த்த பின்பு ஒப்படைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டார்.

பேட்டியின் போது எஸ்எஸ்பி ப்ரதீக்‌ஷா கோடரா கூறுகையில், "புதுச்சேரியில் வேட்பாளர் யார் மீதும், கட்சியின் மீதும் எவ்வித வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x