

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில்பட்டி, முத்துதேவன்பட்டி வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் எம்.பி.ரவீந்திரநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நடக்க இருக்கின்ற இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்முடன் இருந்தார். இருப்பினும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நம்முடன் இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏழை மாணவர்களுக்கும் உயர்க் கல்வி சென்றடையும் நோக்கில் நமது மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ. உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுக.வை அழித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் பல சூழ்ச்சிகளை கையாண்டார். ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் பல்வேறு சோதனைகளுக்கு இடையே அதிமுக.வை பலப்படுத்தி உள்ளனர்.
திமுக.வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஒரு சுயநலக்காரர். ஆண்டிபட்டி தொகுதிக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. ஆண்டிபட்டியில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் பல கட்சிகளுக்கு மாறி தற்போது போடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாரியம்மன்கோவில்பட்டி, திருச்செந்தூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒரு பகுதிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டிகள் கழிப்பிட வசதிகள், சமுதாயக் கூடங்கள் குடிநீர் வசதிகள் என அடிப்படை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் தேர்தலிலும் மக்களின் நலனை காக்கின்ற வகையில் குலவிளக்கு திட்டத்தில் மாதம் ரூபாய் ஆயிரத்து 500, இலவச வாஷிங் மிஷின், வருடத்திற்கு ஆறு இலவச சிலிண்டர்கள், மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலதிட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தேனி ஒன்றிய செயலாளர் ஆர்டி.கணேசன் மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், பா.ஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொடுவிலார்பட்டி அம்பாசமுத்திரம் கோவிந்தநகரம் குப்பிநாயக்கன்பட்டி ஜங்கால்பட்டி பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.