

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலான வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிரான 6 வழக்குகள் ஏற்கெனவே சென்னைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடையைச் சேர்ந்த அருண் பிரசாத், தூத்துக்குடியைச் சேர்ந்த பிராசில் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் சாதியினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் ஒரு சாதியினருக்கு மட்டும் 10.5 உள்ஒதுக்கீடு வழங்குவதால் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே, வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
பின்னர் நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கலான மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருந்து வருவதால், இந்த மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக நெல்லை மனோகரன், மதுரை சுரேஷ், தூத்துக்குடி ராதாராஜ், தேனி சின்னாண்டி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இவர்கள் தங்கள் மனுக்களில், முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை வன்னியர் உள் இடஒதுக்கீடு அமல்படுத்தக்கூடாது.
இதனால் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த 4 மனுக்களும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.